Sunday, 9 October 2022

Devi Mahatmyam/Durga Saptashati || தேவி மஹாத்ம்யம்/துர்கா ஸப்தசதி

ஓம் அகத்தீசாய நம! 



அனைவருக்கும் வணக்கம்! நவராத்திரி ஒன்பதாம் நாள் பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்த ஒரு செய்தியை மேலும் தாமதிக்காமல் இன்றே பதிவு செய்கிறேன். சொல்ல போனால் இதை பதிவு செய்வதற்கு மிகவும் ஆவலாக காத்துக்கொண்டு இருந்தேன்.


சனிக்கிழமைகள் தோறும் நானும் என் தாயும் தவறாமல் எங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள திருத்தலத்திற்கு சனீஸ்வர பகவானை பிரார்த்திக்க போவதுண்டு. அதே போல் நவராத்திரி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு (சனிக்கிழமை) அத்திருத்தலத்திற்கு சென்றிறுந்தோம். அத்திருத்தலத்தின் பூக்கள் விற்பவரில் இருந்து நிர்வாகி வரை அனைவரையும் நாங்கள் நன்றாக அறிவோம். முந்திய மாதம் சென்றிருந்த பொழுது கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணாதபட்சத்தில் அம்மன் சன்னதி உள்ளே லலிதா சஹஸ்ரநாமம் பாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்று வரை யாருக்கும் என்னால் அந்த ஸ்தோத்ரத்தை பாட முடியும் என்று தெரியாது. முதன்முறையாக கருவறை அருகில் பாடியதால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டேன். இந்த முறை சென்றிருந்த பொழுது அக்கோவில் அர்ச்சகர் என்னை அழைத்து "லலிதா ஸஹஸ்ரநாமம் பாடு", என்று கூறினார். ஏன் என்று வினவிய பொழுது "தெரியல. திடீரென்று தோணுச்சு" என்றார். சரி என்று கூறிவிட்டு நானும் மகிழ்ச்சியாக பாடினேன்.


பாடி முடித்தவுடன் நானும் அவரும் (அர்ச்சகர்) சிறிது நேரம் மந்திரங்களை பற்றியும் வெவ்வேறு ஸ்தோத்திரங்கள் பற்றியும் உரையாடிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது முப்பெரும் தேவிகளின் (பார்வதி தேவி, லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி) மந்திரமான தேவி மஹாத்ம்யம்/துர்கா ஸப்தசதி பற்றி உங்கள் கருத்து என்னவென்று கேட்டேன். மேலும் அதை நான் பாராயணம் செய்ய விரும்புகிறேன். இதை பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று வினவினேன். அதற்கு அவரோ, "ஐயோ! தேவி மஹாத்ம்யம் எவ்வளவு பெரிய மந்திரம்! அதை பாராயணம் பண்றது சாதாரண விஷயமா என்ன? திருமணம் ஆகாதவர்கள் அதை படிக்கவே கூடாது. குருவிடம் தீக்ஷை வாங்கி இருக்கணும். பாடசாலை ல முறையா மந்திரங்கள் கத்திருக்கனும். நானே திருமணத்திற்கு அப்பறம் தான் அதை பாராயணம் செய்ய ஆரமிச்சேன்.  அதுல ஒவ்வொரு வார்த்தையின் உச்சரிப்பும் சரியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் உன் வாழ்வில் எல்லாமே நெகட்டிவ் ஆ நடக்கும். அதுனால அதெல்லாம் விட்டுவிடு!", என்று தொடர்ந்து அறிவுரைகளாக கூறிக்கொண்டே இருந்தார்.


நான் மிகவும் வருத்தம் அடைந்துவிட்டேன். அவரும் நான் இதற்கு மேல் தேவி மஹாத்ம்யம் என்ற சொல்லை கூற மாட்டேன் என்கிற நமபிக்கையில் இருந்தார். சிறிது நேரத்தில் உரையாடலை முடித்துவிட்டு நாங்கள் வீட்டிற்கு வந்துவிட்டோம். என் மன வருத்தத்தை வார்த்தையால்  வர்ணிக்க இயலாது. ஏனெனில் வெகு நாட்களாகவே இவ்மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் அர்ச்சகரோ இவ்வாறு கூறிவிட்டாரே என்று யோசித்து கொண்டிருக்கும்பொழுது தொலைப்பேசி வாயிலாக எனது தாயின் வட இந்திய பெண் நண்பர் ஒருவர் (வயது 55+) அழைத்தார். அவருக்கு பக்தி அதிகம். அகத்தியரின் தீவிர பக்தரும் கூட. அவரிடம் இந்த மஹா மந்திரத்தை பற்றி கேட்டபொழுது அவர் எனக்கு மிகவும் தைரியம் ஊட்டும் விதமாக "நிச்சயம் அதை பாராயணம் செய்வது மிகவும் முக்கியம். அதுவும் நவராத்திரி தினங்களில் பாராயணம் செய்தால் தேவியின் முழு அருளும் கிட்டும்", என்று கூறினார்.


அதன்படியே  அடியேனும் நவராத்திரி முதல் நாள் அன்று தேவி மஹாத்ம்யம்/துர்க்கா சப்தசதியை பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். அந்த 9 நாட்களும் தடங்கல்கள் மிகுந்தே காணப்பட்டது. ஆனால் எப்படியாவது நல்முறையாக பாராயணத்தை முடித்திட வேண்டும் என்கிற வைராகியம் மனதில் ஆழமாக பதிந்தது.


நவராத்திரியின் கடைசி நாள் (ஒன்பதாவது நாள்) அந்த மாபெரும் மந்திரமான தேவி மஹாத்ம்யம்/துர்க்கா சப்தசதியை என் அகத்தியர் மற்றும் லலிதா தேவியின் கருணையினால் மிகச்சிறப்பாக பாராயணம் செய்து முடித்துவிட்டேன்! கண்கள் ஆனந்தத்தில் கலங்கிற்று! ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி என்னுள் வந்து சென்றது! பெரிதாக சாதித்த பூரிப்புடன் அகத்தியப் பெருமானின் பொற்கமலங்களை தொட்டு "குரு பிரம்மா! குரு விஷ்ணு! குரு தேவோ மஹேஸ்வரஹ! குரு சாக்ஷாத் பரப்ரஹ்மா தஸ்மைஸ்ரீ குரவே நமஹ!", என்று கூறி தற்காலிகமாக என் பூஜை அறையிலிருந்து விடை பெற்றேன்!


இந்த பதிவை வாசிக்கும் அனைவரும் வாழ்வில் ஏதாவது ஓர் தருணத்தில் சில பெரியவர்களால் ஆன்மீக ரீதியில் பல விதிகளை பின்பற்றும் நிலைமைக்கு ஆளாகிருப்பீர்கள். பெண்கள் இதை செய்ய்ய கூடாது, அதை செய்ய கூடாது என்று பல்வேறு தடைகளை மனிதர்கள் ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் அறிவுரைகளில் சிலவற்றை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். சிரஞ்சீவியான ஹநுமானையே பெண்கள் வணங்க கூடாது என்று கூறுகின்ற உலகம் இது. மஹேஸ்வரி, நாராயணி மற்றும் வாணி - இவர்கள் மூவருமே பெண்கள் தானே. ஆனால், அவர்களை பெண்கள் வணங்குவதற்கு கூட தடைகளா? சிந்தித்து பாருங்கள்! ஆகையால், கண்மூடி தனமாக யார் கூறுவதையும் (எவ்வளவு முதியவராக இருந்தாலும் சரி) நம்பாமல், நம் மனதில் குடிக்கொண்டு இருக்கும் இறைவனை மட்டும் நம்பி, அவர் மேல் பாரத்தை இட்டால், எக்காரியமும் சாத்தியமே என்று உணர்த்துவதற்காகவே இந்த பதிவு!

நன்றி!


ஓம் அகத்தீசாய நம!

ஓம் லலிதாம்பிகையே நம!

வாஹே குரு!

அல்ஹம்துலில்லா!

அல்லேலூயா!

என்றும் இறைவனுக்கான சேவையில்,

- அக்ஷிதா